Tamil Angadi
Tamil Angadi
Tamil Angadi
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Tamil Angadi

This is best all lifestyle things.you can learn here.
 
HomeHome  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Keywords
Latest topics
March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
CalendarCalendar
Top posting users this week
No user

 

 சக்தியாய் சிவம்… சிவமயமாய் சக்தி!

Go down 
AuthorMessage
Admin
Admin



Posts : 64
Join date : 2017-11-19

சக்தியாய் சிவம்… சிவமயமாய் சக்தி! Empty
PostSubject: சக்தியாய் சிவம்… சிவமயமாய் சக்தி!   சக்தியாய் சிவம்… சிவமயமாய் சக்தி! EmptySun Nov 19, 2017 6:36 pm

இந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குலசை தசரா திருவிழாதான்  சட்டென நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு பல ஊர்களிலுமுள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாள்கள் விரதமிருந்து தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல மாநிலம் முழுவதிலும் இருந்து, தசரா 10-ம் நாள் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண குலசைக்குப் படையெடுப்பார்கள். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரி லிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.

கோயில் வரலாறு குறித்து கோயிலின் அர்ச்சகர் செல்லப்பா பட்டரிடம் பேசினோம், ‘`பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் `குலசேகரன்பட்டினம்’ என அழைக்கப் பட்டது. மக்களுக்கு முத்து போட்டதை  ஆற்றி (இறக்கி) எடுத்துக் காப்பாற்றியதால் முத்து ஆற்று அம்மன் என்றாகி இத்தல அம்பிகைக்கு `முத்தாரம்மன்’ எனப் பெயர்வந்தது. மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள். ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர்தான் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர். `ஞானம்’ என்றால் பேரறிவு. `மூர்த்தம்’ என்றால் வடிவம், ‘மூர்த்தி’ வடிவானவர். ‘ஈஸ்வரர்’ என்ற சொல்லுக்கு ஈகை சுரப்பவர் என்பது பொருள்.
இங்கு அம்மை முத்தாரம்மனுடன் அப்பன் ஞானமூர்த்தீஸ்வரரும் ஒருசேர ஒரே பீடத்தில் அருள்பாலிக்கிறார்கள்.  முற்காலத்தில் இந்த இடத்தில் சிவசக்தி வடிவமாக ஒரு சுயம்பு லிங்கம்தான் தோன்றியது.

பிற்காலத்தில் அம்பாளுக்குச் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பிய பக்தர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.  அந்த நேரத்தில் கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்பாள், ‘மகனே எனது உருவத்தைச் சிலைவடிக்க வேண்டு மென்றால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மயிலாடி என்ற ஊருக்குச் செல்’ எனக்கூறி மறைந்தாள். அதேபோல் மயிலாடி கிராமத்திலுள்ள சுப்பையா ஆசாரி என்பவரது கனவில் தோன்றிய அம்பாள், ‘மகனே… எங்கள் வடிவத்தை உற்றுநோக்கு. இவ்வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்துக்கொடு. இந்தக் கல் தென்திசையிலுள்ள ஆண் பெண் பாறையில் உள்ளது. குலசையிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அவர்களிடம் இப்பாறையிலுள்ள கல்லில் இருந்து வடித்தெடுத்த சிலையைக்  கொடுத்தனுப்பு’ என்று கூறி மறைந்தாள். அதன்படியே மயிலாடி சென்று சிற்பி சுப்பையா ஆசாரியைச் சந்தித்து, சிலையை வாங்கிவந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர் ஊர்மக்கள்.
அன்னையும், சுவாமியும் வடதிசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் கள். அம்பாள் திருத்தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண் மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலிப்பொட்டும், மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனி யளாக நான்கு திருக்கைகளும் அதில் வலப்புற  கையில் உடுக்கையும் கீழ்கையில் திரிசூலமும் இடப்புற மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரை தாங்கியும், வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையில் காட்சியளிக்கிறாள்.

சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர், வலப்புற திருக் கரத்தில் செங்கோல் தாங்கியும் இடப்புற திருக்கரத்தில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியும் இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் காட்சியளிக்கிறார்.
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் செவ்வா யும் இருந்தால் அதை `பரிவர்த்தனை யோகம்’ என்று சொல்வார்கள். அதே போல இங்கு சுவாமியின் சக்தியை அம்பாள் வாங்கியிருப்பதால்தான், அம்பாள் சிவமயமாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளின் சக்தியை சுவாமி வாங்கியிருக் கிறார். அதனால்தான் இங்கு சுவாமி சக்தி மயமாகக் காட்சியளிக்கிறார். இதை ’பரிவர்த்தனையோக நிலை’ என்பார்கள். இதனால்தான் இங்கு அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது” என்று சிலிர்ப்போடு விவரித்தார் அர்ச்சகர் செல்லப்பா பட்டர்.
காசியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர் – விசாலாட்சி ஆலயத் துக்குக் கீழ்ப்புறம் கங்கை நதி உள்ளது. அதைப்போல இங்கும் இந்த ஆலயத்துக்கு கீழ்ப்புறம் கங்கைக்கடல் என்னும் வங்கக் கடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில்  நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

[You must be registered and logged in to see this image.]

தசரா திருவிழா
இங்கு தசரா திருவிழா இந்த ஆண்டு வரும் புரட்டாசி 5-ம் நாள் வியாழக்கிழமை 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30.9.17 வரை 10 நாள்கள் நடக்கிறது. தசரா தவிர ஆடி மாதம் கோயிலில் கொடைவிழாவும் நடக்கிறது.  
தசரா நாள்களில் முதல் நாள் துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள்   விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள்  ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும்.

[You must be registered and logged in to see this image.]

“அம்மை நோய் என்றில்லை, சகல நோய் களையும் துன்பங்களையும் நீக்கி வரமருளுவ தால்தான், குலசை முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேடமிட்டு தசராவில் இவள் அருளைப்பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்று பரவசம் பொங்கச் சொல்கிறார் செல்லப்பா பட்டர்.
குலசை தசராவின் சிறப்பம்சமே, திருவிழாவின் போது பலரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபடுவதுதான். பலர் பல வகையான வேஷங்களைப் போட்டுக்கொண்டு வந்தாலும், காளி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
திருவருள் தருவாள் அம்மன்

53 வருடங்களாகத் தொடர்ந்து காளி வேஷம் போட்டு அம்மனை தரிசிக்க குலசைக்கு வருபவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த வேல்காளி. அவரைச் சந்தித்து காளி வேஷம் போட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரதமுறைகள் பற்றியும் கேட்டோம்.

[You must be registered and logged in to see this image.]

“எனக்கு வயசு 68 ஆகுது. 8 வயசா இருக்கும்போது  எங்க அம்மா எனக்கு ராஜா வேஷம் போட்டு குலசைக்குக் கூட்டிட்டு வந்தாங்க. 12 வயசு வரைக் கும் ராஜா வேஷம் போட்டுக்கிட்டுத்தான் கோயிலுக்கு வந்தேன். 13-வது வயசுல எனக்கு அம்மை போட்டு அம்மையோட அதிக காய்ச்சலும் வந்து உடல்நிலை மோசமாகி உயிர் போகுற நிலைமையில இருந்தேன். ‘எம்பிள்ளையக் காப்பாத்திக் கொடு தாயே… என் மகன் ஆயுசு இருக்குறவரைக்கும் தசராவுக்கு மாலை போட்டு காளி வேஷம்  கட்டி ஆடி வருவான்’னு சொல்லி அம்பாளை மனசுல நினைச்சு எனக்கு விபூதி பூசி விட்டாங்க. கொஞ்ச நாளிலயே அம்மை முழுவதுமா இறங்கி உடம்பு தேறிடுச்சு. அந்த வருஷத்துல இருந்து இப்போ வரைக்கும் காளி வேஷம் போட்டுத்தான் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்துட்டு இருக்கேன். இது எனக்கு 54-வது வருஷம். என் உயிரை முத்தாரம்மா காப்பாத்தியதுனால நான் கல்யாணம் செஞ்சுக்காம அம்பாளுக்கு அடிமையானது மாதிரி இப்போ வரைக்கும் சாமியாராகத் தான் இருக்கேன். விரத நாள்கள் மட்டுமல்ல; எப்போதுமே சைவம்தான் சாப்பிடுவேன். தினமும் வீட்டுல அம்பாளுக்கு பூஜை செய்வேன். வெள்ளி, செவ்வாய்க்குத் தவறாம குலசைக்கு வந்துடுவேன்’’ என்றவரிடம், காளி வேஷம் போடுவது குறித்த விரத நியதிகள் பற்றிக் கேட்டோம்.
“காளி வேஷம் போடுறவங்க 41 நாள்கள் விரதம் இருப்பாங்க. மற்ற வேஷம் போடுறவங்க தசரா திருவிழாவுக்குக் கொடியேறிய அன்னியிலேர்ருந்து 10 நாள்கள் விரதம் கடைப்பிடிச்சு, மாலை போட்டு அவரவர் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப விதவிதமாக வேஷம் கட்டுவாங்க.
விரத நாள்கள்ல ஒரு பொழுது மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிட்டு வருவோம். கொடியேறிய தினத்தன்று மாலை போட்ட பிறகுதான், வேஷம் போடக்கூடிய பெட்டியைக் கீழே இறக்கி வேஷம் கட்டிக்குவோம். நான் காளி வேஷம் கட்டுறதுனால முதல்ல முகத்துக்கு பவுடர், சாயம் பூசி அடுத்ததா சேலை கட்டி, ஜடை முடியைத் தலையில் கட்டி, தலைக்குக் கிரீடம் வெச்சு, கண்ணுக்கு வெள்ளி கண்மலர் பூட்டி, வாயில் வெள்ளி வீரப்பல் வைத்து கடைசியாகக் காலுக்குச் சலங்கை கட்டிக்கொள்வேன். பிறகு கையில் திரிசூலம் ஏந்தி வீட்டில் அம்பாளுக்கு பூஜை செய்து தெருக்கள், பஜார்களில் தர்மம் எடுக்கப் போவேன். பிறகு தர்மம் எடுத்த காசை காணிக்கையாகக் கோயில் உண்டியலில் போட்டுவிடுவேன்.
அந்தந்த ஊர்க் கோயில்களில் ஓலைக்குடிசை அமைத்தோ அல்லது அந்தந்த தெருக்களில் ஓர் இடத்தில் ஓலைக்குடிசை அமைத்தோ அதில் முத்தாரம்மன் திருவுருவப்படத்தை வைத்து, தசராவுக்கு மாலை போடும் பக்தர்கள் கூடி 10 நாள்களும் தினசரி பஜனை பாடி, பக்தியோடு பூஜைகளைச் செய்வார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலானோர், குலசைக்கு வேஷம்கட்டி வரும் பக்தர் களாகத்தான் இருப்பார்கள்’’ என்றவரிடம், தசராவில் காளி வேஷம் தவிர, வேறு பல வேஷங்கள் போடுவது குறித்துக் கேட்டோம்.

[You must be registered and logged in to see this image.]

வேஷ பிரார்த்தனையும் விரதமும்…
“எந்தப் பிரச்னை என்றாலும் சரி, எதன் பொருட்டு அம்பாளை வேண்டி வணங்கி விரதம் இருக்கிறோமோ, அந்தப் பிரச்னை அடுத்த வருடம் தசரா வருவதற் குள் தீர்ந்துவிடும். முதன்முதலாக மாலை போடற பக்தர்கள், பல வருஷமா தொடர்ந்து மாலை போடும் பக்தர்கள் மூலமா அம்பாளிடம் வாக்கு கேட்பாங்க. அம்பாள் என்ன வேஷம் சொல்கிறாளோ, அந்த வேஷத்தைக் கட்டிக்கிட்டு  தர்மம் எடுத்துக் கோயிலுக்கு வருவாங்க.
அதேபோல், ஒருத்தர் எத்தனை பெரிய பணக்காரரா இருந்தாலும் சரி, அம்மனுக்கு நேர்ந்துக்கிட்ட வேஷம் போட்டுக்கிட்டா 7, 11, 21 அல்லது 51 வீடுகள் என்ற அடிப்படையில் விருப்பப்படி தட்டு ஏந்தி தர்மம் எடுக்க வேண்டும் என்பது அம்மனின் கட்டளை.
குறவன், குறத்தி, அம்மன், ராஜா, ராணி, போலீஸ், சிவன், பார்வதி, ராமர், லட்சுமணர் இப்படி பல வகை வேஷங் களைப் போட்டுக்கிட்டு முத்தாரம்மனைக் கும்பிட வருகிறார்கள். எல்லோருக்குமே அம்மன் அருள் நிச்சயமா கிடைக்கும்.’’
நெகிழ்ச்சியோடும் சிலிர்ப்போடும்  அவர் கூறியதைக் கேட்கும்போதே ஒருவித பரவசம் தொற்றிக்கொள்கிறது நமக்குள். அதுதான் குலசை அருள்மிகு முத்தாரம்மனின் மகிமை.  நீங்களும் வரும் தசரா திருவிழாவுக்குக் குலசைக்குச் சென்று அன்னையைத் தரிசித்து மனதார வழிபடுங்கள். உங்கள் கவலைகள் தீர திருவருள் தருவாள் அந்த அம்பிகை!
Back to top Go down
https://tamilangadi.forumotion.com
 
சக்தியாய் சிவம்… சிவமயமாய் சக்தி!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Tamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்-
Jump to: